Tuesday, 10 January 2017

நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் (ஆதியாகம் 3/10 )

கரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த  காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய்  குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது.

இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில்  மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்றுஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில்  சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்புநிறக்காகிதம்போல, மனம் அலைவுறத் தொடங்கியிருந்தது.


Thursday, 19 May 2016

குருதியில் தோய்ந்த சூரியன்

கிளைகள் பிளந்த நெடுமரங்களில்
வீழ்ந்துபடுகின்றான்
எழாண்டுகள் முன் குருதியில்
தோய்ந்த சூரியன்

நிலம்
துயரை சுமந்திருக்கிறது.

காலம்
உதிர்தல் குறித்த அச்சத்துடன்
அவசரமாகக்  கடக்கிறது.

Thursday, 28 April 2016

பலி கேட்கும் சாமிக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறோம் ?

  
 "உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக  மாறவேண்டும் "--பெரியார் 

      தனித்தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன்  ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம்,  நவீனம்  என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி  சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம் வழங்கிவிடமுடியாது, எனவே நாங்கள் எந்தச் சாமியின் பக்கமும் நிற்கமுடியாது.

Sunday, 17 April 2016

இறந்தவன் எனக்கொள்க

காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து
உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி
இறந்தவன் எனக்கொள்க.

ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின்
மறைப்பில் நீளுமெனது  நிவாணம்
காலத்தால் வாழ்ந்தவன்
எனக்கொள்க,

சாத்தியமேயில்லாத
இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த
இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில்
விழிகளை  திறந்து போட்டிருக்கிறேன்.
கபாலத்தைப் பிளப்பது போலொன்றும்
இலகுவாயில்லை
காலத்தைப் பிளப்பது.
பெயரை அழித்துவிடுதலும்
எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும்
ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை.

நேற்று நேற்றாயிருந்தது
இன்று நேற்றாயிருந்தது
நாளையும்  நேற்றாய்த்தானிருக்கும்.
மறுநாளும் அதன் மறுநாளும் நேற்றாய்த்தானிருக்கப்போகிறது.
ஆணிகளைத் தூர வீசுங்கள்
உயிரற்றவனை அறைவதற்கொன்றும் சிலுவை தேவையில்லை.


Sunday, 21 February 2016

பனித்திடலில் கரையும் கால நினைதோடியின் பாதுகைக் குறிப்புகள்

தண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்.  என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன்.  

இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது.  ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன்.  முழுமையாக பார்ப்பதற்காக கொஞ்சம் நெருக்கமாக சென்றுவிட்டு ஒரு வித இயலாமையுடன் பின்வாங்கி தொடருந்து நிலைய இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்கிறேன். மனதில் ஏதேதோ கேள்விகள் குடைய ஆரம்பித்தன.