Wednesday 20 February 2013

பிரசவிப்பொன்றை நிகழ்த்துவோம்....

குருதியோடிச் சேறாகி
வறண்டுபோய்
வெடித்துக் கிடக்கிறது
எங்களின் நிலம்,

முளைகருகிச் சருகாகி
புல்பூண்டுகளும்,
மக்கி மண்னேறி மண்டையோடுகளும்
இன்னபிற அவயத்துண்டுகளும்
கறைபடிந்த துணிகளும்
ஆங்காங்கே சிதைந்து கிடக்கின்றன,

ஆந்தைகளும்
ஆட்காட்டிகுருவிகளும் கூட
இடம்தேடி
எங்கோ போய்விட்டன,

கடந்தவைகளை  மறந்து
அடங்கிக்கொண்டிருக்கிறது தேசம்.
தழுவல்களும்
கண்ணீரும்
ஒப்பாரிகளும்-என்
சிறுதேசத்தில் மாற்றங்களை
நிகழ்த்த முயன்று தோற்றுப்போகின்றன,

இழவு முடிந்த
எங்களின் வீட்டு
சுவர்களிலும் தூண்களிலும்
தங்களின் கழிவுகளை கொட்டிவிடும்
வன்மத்தோடுதான்
வாசல்களில் மேடை போடுகிறார்கள்
கௌதம புத்தரின் வழிப்பிள்ளைகள்.

அவர்களுக்காக,
சாம்பல் மேடுகள்மீது
செங்கம்பளம் விரித்து சாமரையோடு
காத்திருக்கிறார்கள்
உணர்ச்சிகளை தட்டி வாக்கு வாங்கியவர்கள்.

மழைக்காலத்தின் பூசிகளாய்
எழுந்தோய்கிறது
மனிதஉரிமை பேச்சுக்களும்
காணொளிகளும்,
வலிகளை சுமத்தி தங்கள் வசதிகளை
நிர்ணயப்படுத்திக்கொள்கிறார்கள்
வல்லூறுகளின் சிறகுகளில்
ஒளிந்துகொண்டவர்கள்.

வலி பொறுத்திருக்கும்
இந்த காலத்தில் கூடி
ஒரு கருக்கொள்ளுவோம்!!
உருக்குலைந்த உறவுகளின்
உணர்வுகளை உணவாக்கி
கரு வளர்ப்போம் !!

நாளைய பொழுதொன்றில்,
குருதியோடி
வறண்டு வெடித்த அந்த நிலத்தில்
மீள் பிரசவிப்பொன்றை நிகழ்த்துவோம்!
தேசத்தின் சுவர்களை கட்டியமைப்போம் !!

Wednesday 13 February 2013

காதல் காதல் காதல் போனால் .....(காதல் கலவை இரண்டு)

இருக்கிறதோ......
இல்லையோ .................
தவிக்க வைப்பது
தெய்வமும் காதலும் மட்டுமே.
                  *************
எருக்ககலை நாயுருவி
குருக்கத்தி கூப்பிட்டுக்குத்தி
இவைக்கே தெரியும் என் காதல்.
************

மொழிபெயர்க்க முடியாமல்
விழிகளால் எழுதும்
வித்தையை எங்கே கற்றாய்?
                        ************

நீ கடந்தபின் பார்க்கும் துணிவை
பார்த்து சிரிக்கிறது-உன்
ஒற்றைப்பின்னல்.
***********

எங்கேயும் எனைபிரிந்து
போய்விட முடியாது உன்னால்,
அங்கே
உனக்கு முதல்
என் கவிதை இருக்கும்.
                      **********










வழியனுப்புதல் நிச்சயம்
பாடையிலா???
பல்லக்கிலா???
**********

என்றாவது ஒருநாள்
உன் பெருமூச்சு சொல்லும்
என் மீதான காதலை.
                       **********
எரிப்பவர்களிடம் கேட்டுப்பார்
ஒரு இடம் எரியாதிருக்கும்
அதுவே
உன் முதல் பார்வை
பட்ட இடம்.
***********
நீ
எங்காவது எப்படியாது
வாழ்ந்துவிட்டு போ.
எப்படி இருக்கிறான்
என்று மட்டும் கேட்டுவிடாதே ...............


Monday 11 February 2013

காதல் காதல் காதல் போயின் .........(காதல் கலவை ஒன்று)

இன்னும் இருக்கிறது 
காதல் கடிதம் 
காதல் ......................!!!

*************

முன்னிரவுகளில் 
நட்சத்திரங்களை தூவிய விழிகளை 
அடித்து சென்றுவிட்டது 
ஆதவக்கரங்கள்.

************

மெல்லியதாய் எங்கோ ஒலிக்கிறது 
சோகப்பாடல்,
சோர்ந்து போய்
உச்சரிக்கிறது உதடு.

***********

அன்று,
இதே நிலா 
நீயும் நானும். 
அதோ நிலா
நீ .................!!!

************

மலர்தாவிய வண்டை 
திட்டினாய்.
வியந்தேன்.............
மனம் மாறி திட்டினாய். 
சிதைந்தேன்.

***********

உன்னை சந்திக்கும் 
அந்த நேரம் கடக்கையில்
நரகம் தெரிகிறது. 
கடந்தபின்.......
மரணம் புரிகிறது. 

*************

கைதவறி பட்டபோது 
தடுமாறிய  மனது நீ 
கரம்பற்றிப்போனபோது 
அனாதையாய் போனது ............

***********

உன்னை பார்த்ததை விட 
உன் வீட்டு 
கதவை, யன்னலை, சைக்கிளை 
பார்த்து அதிகம்.

************

முதல் தரம் 
இல்லையடா என்றாய் 
இரண்டாம் தரம் 
என்னடா என்றாய் 
மூன்றாம் தரம் 
ம்ம்ம்ம்ம்ம்ம் என்றாய் 
அப்போதும் புரியவில்லை 
அதுதான் காதல் என்று.

*************

வளைந்த பூவரசும் 
வேலிக்கிளுவையும்
ஒற்றைத்தென்னையும்
சொல்லிக்கொண்டிருக்கின்றன 
காற்றில் என் காதலை.

**********

நானும்,  
உன் பெற்றோரும்,
ரோடுகளில் காவலிருந்த 
காலங்கள் கடந்திருக்கலாம் ........
காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

***********

திட்டி துப்பிய எச்சிலையே 
தேடித்திரிந்தவன்.
நல்லவேளை 
நீ மட்டும் கிடைந்த்திருந்தால்...................